வெளியூர் சென்று
கொண்டிருந்த ஒருவன் வழியில் ஒரு சத்திரத்தைக் கண்டான். இங்கே தங்கி ஓய்வெடுத்துச்
செல்லலாம் என்ற எண்ணத்தில் குதிரையை விட்டு இறங்கினான். குதிரையை அருகிலிருந்த
மரத்தில் கட்டினான். அது உண்பதற்காகப் புல் போட்டுவிட்டு சத்திரத்திற்குள்
நுழைந்தான். அப்பொழுது அங்கிருந்த குறும்பன் ஒருவன் குதிரையின் வால் முடியைப்
பிடித்து இழுத்தான். இதைப் பார்த்த அவன், “தம்பி இது முரட்டுக்
குதிரை. வால் முடியைப் பிடித்து இழுக்காதே உதைத்தால் உன் பற்கள் எல்லாம்
போய்விடும்” என்று எச்சரித்து விட்டு உள்ளே
சென்றான். ஆனால் அந்தக் குறும்பன் இந்த எச்சரிக்கையை சிறிதும் பொருட்படுத்தவில்லை.
மீண்டும் குதிரையின் வால் முடியைப் பிடித்து இழுத்தான். குதிரையால் வலியைப்
பொறுக்க முடியவில்லை. விட்டது ஒரு உதை. அவன் நான்கைந்து குட்டிக்கரணங்கள் போட்டு
சிறிது தொலைவில் விழுந்தான். முன் பற்கள் விழுந்ததோடு அல்லாமல் நல்ல காயமும்
அவனுக்கு ஏற்பட்டது.
இந்த அநியாயத்தைக் கேட்பார்
யாரும் இங்கு இல்லையா? என்று கூச்சலிட்டான் அவன்.
அங்கே கூட்டம் கூடி விட்டது. என் இந்த நிலைக்கு முரட்டுக் குதிரையின் சொந்தக்காரன்
தான் காரணம் என்றான் அவன். தனக்கு இழப்புத் தொகையோ அல்லது குதிரை உரிமையாளனுக்கு
தண்டனையோ தர வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தான். வழக்கு தொடங்கியது.
குதிரை சொந்தக்காரனைப் பார்த்து நீதிபதி இந்த முரட்டுக் குதிரை உன்னுடையதுதானா? என்று கேட்டார். ஆனால் அவனோ ஏதும் பேசவில்லை. ‘ உன் குதிரையால்தான்
இவனுக்கு இவ்வளவு காயம் ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு என்ன சொல்கிறாய்’ என்று மீண்டும் கேட்டார் நீதிபதி. இப்பொழுதும் அவன் ஒன்றும்
பேசவில்லை. இதைக் கண்ட நீதிபதி ‘ இவன் செவிட்டு ஊமை போல் இருக்கிறான். என்ன கேட்டாலும்
பதில் பேசாமல் இருக்கிறான். என்ன கேட்டாலும் பதில் சொல்லாமல் நிற்கிறானே’ என்றார்.
உடனே வழக்கு தொடுத்தவன் ‘ என்ன வாயிலே கொழுக்கட்டையா
வைத்து இருக்கிறாய்? இது முரட்டுக் குதிரை. வால்
முடியைப் பிடத்து இழுக்காதே. உதைத்தால் பல்லெல்லாம் போய் விடும் என்று அப்பொழுது
கத்தினாயே. இப்பொழுது செவிட்டு ஊமை போல நடித்து ஏமாற்றவா பார்க்கிறாய்’ என்று கோபத்துடன் கத்தினான். இதைக் கேட்டதும் நீதிபதிக்கு உண்மை
புரிந்தது. வழக்கு தொடுத்தவனைப் பார்த்து, ‘ அவர் எச்சரித்த பிறகும்
குதிரையின் வால் முடியைப் பிடித்து இழுத்தாயா?’ என்று கேட்டார். அவன் தலை
கவிழ்ந்து நின்றான்.
குதிரையின் சொந்தகாரன், ‘ நீதிபதி அவர்களே தங்களுக்கு உண்மை தெரிய வேண்டும்
என்பதற்காகவே ஊமை போல நடித்தேன். என்னை மன்னித்து விடுங்கள்’ என்றான். வழக்கு தொடுத்தவனைக் கடுமையாக்க் கண்டித்து அனுப்பிய
நீதிபதி குதிரை சொந்தக் காரனின் அறிவு கூர்மையைப் பாராட்டினார்.