தவறிழைத்த அரசனொருவனைச் சினங்கொண்ட
முனிவர் ஒருவர்,''நீ
நாளையே பன்றியாகிச் சாக்கடையருகே திரியக்கடவாய்'' என்று சபித்துவிட்டார். பன்றியாக
மாறிவிடும் கேவலத்தை விரும்பாத அரசன் தன் மகனை அழைத்து, ''நான், நாளை பன்றியாக மாறிய மறுகணமே என்னை வாளால்
வெட்டிக்கொன்றுவிடு!'' என்று
கேட்டுக்கொண்டான்.
எதிர்பார்த்தபடி மறுநாள் காலை அரசன்
பன்றியானான். மகன் சோகத்துடன் பன்றியான தன் தந்தையை வெட்ட வாளை வீசும்போது,'' மகனே! பொறு! இன்னும் ஒருமாதம்
பன்றிவாழ்க்கை எப்படியிருக்கிறது என்று பார்த்துவிட்டுச் சாகிறேன். அடுத்த மாதம்
இதே நாளில் என்னைக்கொன்று விடு'' என்றான்.
பன்றி வாழ்க்கையில் அவன் ஒரு பெண்
துணையைத்தேடிக்கொண்டான். பெண் பன்றி கர்ப்பமானது. ஒருமாதம் கழித்து மகன் மீண்டும்
தந்தையைக் கொல்ல வாளுடன் வந்தபோது,'' மகனே
இப்போது நான் இறந்தால் கர்ப்பமாகியுள்ள என் மனைவி ஆதரவற்றுவிடுவாள். குட்டிகள்
பிறந்த பின் அடுத்த மாதம் இதே நாளில் என்னைக் கொன்றுபோடு'' என்றான்.
மீண்டும் ஒருமாதம் கழித்து, மகன் தந்தை தனக்கிட்ட கட்டளைப்படி
தந்தையையின் அருவருப்பான வாழ்வை முடிவு கட்ட வந்தபோது,'' மகனே இந்தக் கேவலமான வாழ்க்கை எனக்கு
இப்போது பழகிவிட்டது. சாக்கடை ஓரத்தில் சமாளித்து வாழவும் பழகிவிட்டேன். மனைவி, குட்டிகள் என்று பந்தமும் பொறுப்பும் எனக்கு
இந்த வாழ்வையும் அர்த்தமுள்ளதாக்கிவிட்டது. இனி இப்படியே இருந்துவிடுகிறேன். என்னை
இனி இப்படியே வாழவிடு. எந்தத் துன்பம் வந்தாலும் பழகிக்கொண்டு நீயும்
வாழக்கற்றுக்கொண்டால், உன்
வாழ்வும் மகிழ்வாக இருக்கும் '' என்று
மகனுக்கு அறிவுறுத்தினான்.
நமக்கு வரும் பிரச்சினைகளைத் தீர்க்க 3 வழிகள் இருக்கின்றன.
முதல் வழி பிரச்சினைகளைத் தீர்க்க வழி
தேடுவது.
அடுத்தது,பிரச்சினைகளை ஒதுக்கிவிட்டுச் செல்வது.
இறுதிவழி பிரச்சினைகளை ஏற்றுக்கொண்டு
வாழ்வது. பல நேரங்களில் இந்த இறுதிவழிக்கே நாம் தள்ளப்படுகிறோம். பன்றியான அரசன்
மாதிரி பிரச்சினையோடு வாழ்வதே தீர்வாகிறது.